சேலம்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி பரப்புரை மேற்கொள்ளும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்தும், அவரது பிறப்பு குறித்தும் இழிவாகப் பேசியதாக காணொலிகள் வெளியாகின.
ஆ.ராசாவின் இந்தக் பரப்புரை பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆ.ராசா தரங்கெட்டு பேசியதாகக் கூறி அதிமுகவினரும் அதிமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் நேற்று (மார்ச்.27) இரவு முதலே ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உட்பட கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மகளிர் அணியினர் ஒன்றுகூடி ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் உருவ பொம்மையை எரித்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அதேபோல், சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் அதிமுகவின் மகளிர் அணியினர், ஆ.ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக ராசாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.