ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பல முக்கிய இடங்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட ஊராட்சி, சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று மாவட்டத்தின் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது.
இதில் எடப்பாடி, ஏற்காடு, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், காடையாம்பட்டி, ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி, ஓமலூர், சேலம், நங்கவள்ளி, வீரபாண்டி , அயோத்தியாப்பட்டணம், பனைமரத்துப்பட்டி , மேச்சேரி ஆகிய 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவர் பதவியை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
மீதமுள்ள தாரமங்கலம், கொளத்தூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக - அதிமுக கடுமையாக மோதிக் கொண்டதன் விளைவாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை அதிமுகவின் பார்வதி மணி கைப்பற்றினார். அதேபோல வீரபாண்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை அதிமுகவின் வருதராஜ் கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி மலர்விழி தோல்வியடைந்தார். இதனால் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர் .
அதிமுக வருதராஜ் பெற்ற வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், மலர் மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: முடிந்த இரண்டு மாத பரோல் - சிறை திரும்பிய பேரறிவாளன்