சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் வின் ஸ்டார் என்ற பெயரில் மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) நிறுவனத்தைத் தொடங்கி கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து, பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
நிதி நிறுவனம், நெல்லிச்சாறு பானம், ஜவுளி எனப் பல்வேறு தொழில்களை நடத்தி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். அதிமுக பிரமுகரான இவரிடம் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் சேலம் மாநகர காவல் துறையினரிடம் சிவக்குமார் குறித்து புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சிவக்குமார் தற்போது பிணையில் இருந்துவருகிறார்.
பொதுமக்களுக்கு தர வேண்டிய பணத்தைத் தராமலும், அவரின் பெயரில் உள்ள சொத்துகளை விற்றுவந்ததும் தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சிவக்குமார் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும். ஆனால், கடந்த பத்து நாள்களாகக் காவல் நிலையத்திற்கு வராமல், காவல் துறையினர் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று கையொப்பம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சேலம் குரங்கு சாவடி அருகே உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் திடீரென்று மயங்கி விழுந்தனர். இதே போன்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் எடுத்துவந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்ற முயற்சித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவற்றைக் கைப்பற்றினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், பொருளாதாரக் குற்றப்பிரிவில் இந்த வழக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதுவரை ஒருவருக்குக்கூட பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதிமுக பிரமுகர் என்பதால் காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். இதே நிலை நீடித்தால் தொடர்ந்து போராடுவோம் என்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைகள் - அச்சத்தில் பொதுமக்கள்