சேலம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(பிப்.28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் செம்மலை, வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா இருவரும் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் முதலுதவி பெற்றதையடுத்து, மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "சென்னையில் கள்ள ஓட்டு செலுத்திய நபரான நரேஷ்குமாரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். கள்ள ஓட்டு செலுத்த முயன்றவரை பிடித்துக்கொடுத்த ஜெயக்குமார் மீது வழக்குப்போடுவது நியாயமா?
நகை பறிப்பு, இருசக்கர வாகனத் திருட்டு என 12 வழக்குகள் உள்ள நரேஷ்குமாருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடத்தும் வகையில் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தனர்.
எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு ஓட்டு
இந்த நிலையில் ஏன் ரவுடி நரேஷ்குமார் கைது செய்யப்படவில்லை? அவர் கைது செய்யப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது. ரவுடிகள் கள்ளஓட்டு போட்டதால் திமுக வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெறவில்லை. காவல்துறையும் மாநிலத் தேர்தல் ஆணையமும் திமுக வெற்றி பெற துணை நின்றுள்ளது. நேர்மையாக வெற்றி பெறவில்லை, வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற கட்சி திமுக அல்ல. சென்னையில் கள்ள ஓட்டுகள் அதிகம் பதிவாகியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் 67 முதல் 68 விழுக்காடு வரை வாக்குப்பதிவு இருந்தது. ஆனால், தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 43 விழுக்காடு மட்டும் வாக்குகள் பதிவாகி உள்ளன. மக்கள் அச்சம் அடைந்த நிலையில் வாக்கு செலுத்தவில்லை. சென்னை, கோவை நகரங்களில் 13 விழுக்காட்டிற்கும் மேலாக கள்ள ஓட்டு செலுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தப் பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு வாக்கு செல்வதாக தெரிய வந்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும்.
ஓட்டுக்கு ரூ. 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பரிசுப் பொருட்கள் வழங்கி திமுக மாயாஜால வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை ஒடுக்குவதாக நினைத்தால் திமுக காணாமல் போய்விடும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டது என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது.
விளம்பரத்துக்காக ஆட்சி நடத்தும் ஸ்டாலின்
1972இல் அதிமுக தொடங்கியபோது இதேபோல கட்சித் தொண்டர்கள் மீது முதலமைச்சராக இருந்த கருணாநிதி வழக்குப் போட்டார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மக்களை சந்தித்து போராட்டம் நடத்தினார். பொய் வழக்கு போட்ட நிலையில் அதிமுகவை அசைக்க முடியாத கட்சியாக எம்ஜிஆர் உருவாக்கினார்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது திமுக வேண்டும் என்று வழக்குகளைப் போட்டு பல்வேறு துன்பங்களை அளித்தனர். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. வழக்குகளைப் போட்டு பூச்சாண்டி காட்ட வேண்டாம். மக்கள் பிரச்னைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக இருக்கும்.
சட்டரீதியாக சந்திப்போம்
30 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. சேலம் நகரில் எந்த திட்டத்தையும் தற்போதைய திமுக அரசு நிறைவேற்றவில்லை. விளம்பரத்துக்காக ஆட்சி நடத்திக்கொண்டிருப்பவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் தொடங்கிய அம்மா மினி கிளினிக்குகளை திமுக மூடி சாதனைப் படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
அதிமுகவில் போடப்பட்ட திட்டங்கள் தான் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் முறையாகச் செய்யவில்லை. விவசாயிகள் நஷ்டத்துக்கு உரிய பணம் கொடுக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தற்போது முடிந்துவிட்டது, அடுத்து வீட்டு வரி 200 மடங்கு உயர்த்தப் போவதாக கூறப்படுகிறது.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். அதுபோல அதிமுக ஆட்சி பற்றி மக்களுக்கு விரைவில் தெரியவரும். திமுக வேண்டும் என்று திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு வருகிறது. இதை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திப்போம். தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வைப்போம். தேர்தல் முறைகேடு தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்