சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அளவிலான வணிகவரித் துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வணிகர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழ்நாடு முழுவதும் வணிகவரி ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வணிகர்களிடம் தொழில் செய்வதில் இடையூறு ஏற்படுவது குறித்தும் ஜிஎஸ்டி வரி பிரச்னை குறித்தும் கேட்டறியப்பட்டது. அடுத்த வாரம் முழுமையாக ஆய்வை முடித்துவிட்டு தேவையானவற்றை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி அனுமதி பெற்று ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவிக்க இருக்கிறோம்.
கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு மாற்றங்களை எங்களது ஆட்சி செயல்படுத்தியுள்ளது. கடந்த கால ஆட்சியில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளனர்.
அதையெல்லாம் சமாளித்து முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறார். வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் ஒரே இடத்தில் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து மாவட்டங்களில் பணியாற்றியவர்களை கவுன்சிலிங் முறையில் மாற்றம் செய்யலாமா என்றும் பணியிட மாற்றம் செய்யலாமா என்றும் ஆலோசித்துவருகிறோம்.
நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். தொழில் செய்யாமல் வணிகர் போர்வையில் அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொருள்களை கொண்டு வருவதில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க கூடுதல் பறக்கும் படைகள் அமைக்க முடிவு செய்திருக்கிறோம்.
ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு. எந்தெந்த பொருளுக்கு வணிகர்கள் பொதுமக்கள் வரியை குறைக்க வலியுறுத்துகிறார்கள் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவிப்போம்.
பத்திர பதிவுத் துறையை பொறுத்தவரையில் ஆள்மாறாட்டம், போலி பத்திர பதிவு சில இடங்களில் தவறு நடந்துள்ளது. தவறுகள் கண்டறியப்பட்டு தொடர்புடைய அலுவலர்கள் மீது தற்காலிக பணிநீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதேபோல கோயில் நிலங்களை தனியார் பதிவு செய்ய முடியாது. அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.