ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட என மூன்று தொடர்களிலும் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலியா சுற்றப்பயணத்தை முடித்துவிட்டு கடந்த வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்கு வந்த நடராஜனுக்கு ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் நடராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி சார்பில் விளையாடியது மிகப்பெரிய சந்தோசத்தை அளித்தது. இந்திய அணி சார்பில் விளையாடிய கடந்த 2 மாத காலம் கனவு போல இருந்தது. சக வீரர்கள், பயிற்சியாளர்கள் நல்ல ஆதரவு அளித்தனர், அதனால்தான் சாதிக்க முடியாது. இதையே பெரிய சாதனையாக நினைக்கிறேன், வெற்றி கோப்பையை கையில் வாங்கும்போது கண் கலங்கிவிட்டேன்.
சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகள் ஐபில் அனுபவம், சர்வதேச போட்டிகளில் உதவியாக இருந்தது” என்றார்.
இளைஞர்களுக்கு என்ன சொல்லி நினைக்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம்; அதற்கு நானே பெரிய உதாரணம். எந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் கட்டாயம் விளையாடுவேன். நான் மட்டுமின்றி அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடியதால்தான் வெற்றி கைவசமானது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பிறந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை விட நாட்டுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் இருந்து பல வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு முழு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாரட் வண்டியில் வந்த சாதனை வீரர் நடராஜன்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!