சேலம்: தமிழகம் முழுவதும் அரசு நியாய விலைக் கடைகளுக்கு பருப்பு மற்றும் பாமாயில், ஐந்து நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீப் என்பவருக்கு சொந்தமான பருப்பு குடோன் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மேட்டுவேளாளர் தெருவில் அமைந்துள்ளது. இங்கு வருமானவரித்துறை சென்னை ஆய்வாளர் வம்சி கிருஷ்ணா, தர்மபுரி வருமானவரித்துறை அதிகாரி நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஐந்துபேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சோதனை நடத்த வந்துள்ளனர்.
அப்போது அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு 9 மணி அளவில் சேலம் மாநகரகாவல் துறை பாதுகாப்புடன் உடன் சீல் வைக்கப்பட்ட பருப்பு குடோனை திறந்து ஐந்து பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது 400 டன் அளவிலான பருப்பு, குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? ஏதாவது வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.
இந்த குடோனில் இருந்து ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், இதனை ஆராய்ந்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இரவு தொடங்கி அதிகாலை வரை பருப்பு குடோனில் நடைபெற்ற இந்த வருமான வரி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 6.5 கோடி சுருட்டிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி