கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ். இவர் பெரிய தொழிற்சாலைகளில், உயரமான இடங்களில் பணிகள் மேற்கொள்ள பயன்படுத்தப்படும், 14 சக்கரங்கள் கொண்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள ராட்சத கிரேன் வாகனத்தை விலைக்கு வாங்கி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு அனுப்பிவருகிறார்.
இந்நிலையில், ஏப்ரல் 12ஆம் தேதி வாழப்பாடி அருகே இயங்கும் தனியார் தொழிற்சாலைக்குப் பணிகளை மேற்கொள்ள சுரேஷ் இந்த ராட்சத கிரேன் இயந்திரத்தை அனுப்பிவைத்தார்.
அங்கு பணிகளை முடித்து கிரேன் வாகனம், நேற்று முன்தினம் (ஏப். 13) நள்ளிரவு 12.45 மணியளவில், வாழப்பாடியிலிருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அயோத்தியாபட்டணம் அடுத்த கருமாபுரம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கிரேன் வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனைக்கண்ட இந்த வாகனத்தின் மீது அமர்ந்திருந்த, டெல்லியைச் சேர்ந்த கிளீனர் சமீம் அகமத் (32) என்ற இளைஞர் அதிர்ச்சியில் வாகனத்திலிருந்து சாலையில் குதித்துள்ளார். அப்போது, அவரின் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிரேன் வாகனத்தை ஓட்டிவந்த, பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பத்திரிநாத் (40) மற்றொரு கிளீனர் பிகாரைச் சேர்ந்த ஹேமந்த் (24) ஆகிய இருவரும் வாகனத்திலிருந்து இறங்கி, தப்பித்து ஓடிவிட்டனர் .

இது குறித்து காரிப்பட்டி காவல் துறையினர், வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தால், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நள்ளிரவு முதல் அதிகாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காரிப்பட்டி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் மோகன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நூற்பாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்!