சேலம் மாவட்டம், மல்லூர் அருகேயுள்ள சந்தியூர் அடுத்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி (58). இவரது மனைவி சாந்தா (50). இவர் மரவள்ளிக்கிழங்கு மாவு வாங்கி வியாபாரம் செய்து வந்தார். சாந்தா பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக மகளிர் அணியின் தலைவியாகவும், பெரமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சாந்தா தனது இருசக்கர வாகனத்தில் ஆட்டையாம்பட்டி அருகே சென்ற போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு சராமரியாகத் தாக்கியுள்ளார்.
அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில், படுகாயமடைந்த சாந்தாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து காவல் ஆய்வாளர் அம்சவல்லி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாந்தாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
மேலும் கொலையாளியை உடனே பிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை காவல் துறையினர் கொலையாளியை ஆட்டையாம்பட்டியில் கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலையாளியின் பெயர் ரமேஷ் என்பதும் சாந்தாவின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்வதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிமுக பெண் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாத்தூரில் கொலை வழக்கில் கைதான ஐந்து பேருக்கு நீதிமன்றக் காவல்!