சேலம்: வாழப்பாடி அருகில் உள்ள நீர்முள்ளி குட்டை கிராமத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகளூர் வெங்கடேசன் கூறுகையில்,' நீர்முள்ளி குட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் அந்த கிராமத்தில் கல்வெட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீர்முள்ளிகுட்டையில் மாரிமுத்து என்பவரின் விளைநிலத்தில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துடன் கூடிய ஓர் நடுகல்(வீரக்கல்) கண்டறியப்பட்டது. இந்த நடுகல்லானது 31/4 அடி உயரமும் 31/4 அடி அகலத்துடன் உள்ளது. இதன் மேற்புறம் 6 வரியில் வட்டெழுத்துடன் கல்வெட்டு காணப்படுகின்றது. இதில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 85 ஆகும். எழுத்தமைதி மற்றும் வரலாற்று பின்புலம் கொண்டு இது 9ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது என முடிவு செய்யலாம்’ எனக் கூறினார்.
குறுநில மன்னனின் நடுகல்:மேலும் கூறுகையில், ஒரு அடி உயரமும் இரண்டரை அடி அகலமுள்ள இடத்தில் எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. எழுத்துக்களின் கீழே நடுகல் வீரனின் உருவம் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. வீரனின் உயரம் இரண்டு அடி,அகலம் ஒன்றேமுக்கால் அடியாகவும் உள்ளது. வீரனின் வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் காணப்படுகிறது.
தலைப்பகுதியில் கொண்டையும்,காதணியாக பத்தரகுண்டலமும் காட்சியளிக்கிறது.
இடுப்பில் குறுவாள் உள்ளது. வீரனின் கீழே வலதுபக்க மேல்பகுதியில் அம்பும், கீழ் பகுதியில் கெண்டியும் உள்ளது.நடுகல்லானது தென் திசையை நோக்கி உள்ளது. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் வலுவிழந்தபோது ஆங்காங்கே குறுநில மன்னர்கள் வலிமை பெற்று சிறு,சிறு பகுதிகளை ஆண்டு வந்தனர். பெரிய பேரரசுகள் ஏதும் உருவாகாத காலகட்டத்தில் இந்த நடுகல் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. எனவே இதில் ஆட்சியாண்டு பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.
இரமாடிகள் வம்சம்:இந்த காலகட்டத்தில் ஆத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இராமாடிகள் என்பவர் ஆட்சி புரிந்து வந்துள்ளார். அப்போது அவரின் மகன் பெருமான் என்பவர் பூலாம்பாடி என்ற ஊரின் மீது படையெடுத்து சென்றுள்ளார். இந்த பூலாம்பாடி என்பது தற்போது பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரின் அருகே உள்ள ஊராக இருக்கலாம். பூலாம்பாடி அருகே உள்ள செந்தாரப்பட்டி என்ற ஊரில் வட்டுடெழுத்துடன் கூடிய ஆறு நடுகற்கள் உள்ளது. அவையும் கூட இந்தப்போரில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம்.
அந்த படையெடுப்பில் கலந்து கொண்ட பிள்ளைப்பாடி என்னும் ஊரை சேர்ந்த பாராவன்னார் என்பவரது மகன் பொன்னகுன்றி என்பவன் வீர மரணம் அடைந்தான் என்ற செய்தி இந்த வட்டெழுத்து கல்வெட்டில் உள்ளது. அந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும். இராமாடிகள் என்ற குறுநில மன்னரின் வம்சம் ஆத்தூர் பகுதியை ஆட்சி செய்தது தமிழக வரலாற்றுக்கு ஒரு புதிய செய்தியாகும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:யோகா விழிப்புணர்வுக்காக 3 ஆண்டு பயணம்.. தஞ்சை வந்த மைசூரு இளைஞர்!