மத்திய அரசின் புள்ளியியல் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் மூலம் பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது போன்று பொருளாதார கணக்கெடுப்பும் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நாடு தழுவிய அளவில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளவுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்தப் பொருளாதார கணக்கெடுப்பு பணி சேலம் மாவட்டத்தில் மிக விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் மத்திய அரசின் பொதுச்சேவை மையங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து 500 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்தப் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று பொருளாதார கணக்கெடுப்பு எப்படி நடத்துவது என்று செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. புள்ளியியல் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பாளர்களுக்கு நேரடியாக விளக்கங்கள் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புள்ளியியல் துறை உதவி இயக்குநர் லோகநாதன் பேசுகையில், நாட்டிலேயே முதன்முறையாக நவீன முறையில் செல்ஃபோன் செயலி மூலம் இம்முறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.