கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சேலத்திலும் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் களைகட்டிவருகின்றன. இதற்காகச் சேலத்தில் உள்ள பல்வேறு அடுமனைகள் (பேக்கரி), கேக் விற்பனை கடைகளில் புதுவிதமான கேக்குகளைத் தயார்செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
பாடகர் எஸ்பிபி உருவ கேக்
அதன் ஒரு பகுதியாகச் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரி கடையில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பலசுப்பிரமணியத்தின் நினைவாக 6 அடி உயர கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கையில் மைக் பிடித்துப் பாடுவதுபோல் இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று (டிசம்பர் 23) சேலம் குழந்தை இயேசு பேராலயம் பாதிரியார் ஸ்டான்லி, எஸ்.கே. கார்ஸ் குரூப் உரிமையாளர் எஸ்.கே. முருகானந்தம் ஆகியோர் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவைத்தனர். இந்த கேக் முன்பு பொதுமக்கள் ரசித்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து பேக்கரி உரிமையாளர் சதீஷ் கூறுகையில், "மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஃபிலிம்பேர் விருது, கின்னஸ் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவரைப் போல இனி ஒரு பாடகர் வருவது கடினம். அவருக்குப் பெருமைசேர்க்கும் வகையில் 6 அடி உயர கேக் தயார் செய்துள்ளோம்.
100 கிலோ சர்க்கரையில், 80 முட்டை, இனிப்பு பொருள்களைக் கொண்டு இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் இரவு பகலாக 6 பேர் கொண்ட குழுவினர் இந்தக் கேக்கைத் தயாரித்து முடித்தனர். இதற்கு முன்னதாக ரஜினி, கிரிக்கெட் வீரர் தோனி போன்ற உருவத்தில் கேக் செய்துவைத்துள்ளோம்" என்றார்.