கரோனா பரவலைக் கட்டுப்பட்டுத்த சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுக்கள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் பொதுமக்களின் உடல் நிலையை கண்காணிக்க தினந்தோறும் 136 இடங்களில் 56 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தெரு வாரியாக நுண்ணிய அளவிலான கண்காணிப்புப் பணிகள் மேற்கொண்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், அப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் மாநகராட்சி அலுவலர்கள் / பணியாளர்களைக் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் முறையே, 10, 10, 11, 10 என்ற எண்ணிக்கையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காணிப்புக் குழுக்களிலுள்ள பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களில் நோய் தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்துவர். மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்வார்கள்.
கரோனா தொற்று நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை சம்பந்தப்பட்ட உதவி ஆணையாளர்களும் உதவி செயற்பொறியாளர்களும் ஆய்வு செய்து தினந்தோறும் அறிக்கையாக அனுப்பி வைக்க உத்திரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.