சேலம் மாவட்டம் ஒமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து மாடு ஒன்றை ஏற்றிக்கொண்டு டாடா ஏசி சரக்கு வாகனம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இரவு, சுமார் 12 மணியளவில் கந்தம்பட்டி மேம்பாலத்தின் மீது முன்னே சென்ற லாரி, தனது வேகத்தை சட்டென்று குறைத்ததால் நிலைதடுமாறிய டாடா ஏசி வாகனம் லாரியின் பின்பக்கம் மோதியது.
அதே நேரத்தில், டாடா ஏசி வாகனத்தை பின்தொடர்ந்து வேகமாக வந்த மற்றொரு லாரி டாடாஏசி வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கிய டாடாஏசி வாகனம் முற்றிலுமாக சிதைந்தது.
அதில் பயணம் செய்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், பாலு மற்றும் ஷாருக்கான் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஓட்டுநர் சாதிக்பாட்ஷா(44) சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். டாடா ஏசி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட மாடும் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று லாரிக்கு அடியில் சிக்கியிருந்த டாடா ஏசி வாகனத்தை கிரேன் கொண்டு அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகே அதிலிருந்த மூன்று சடலங்கள் மீட்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சூரமங்கலம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி நாட்டமங்கலம் பகுதியில் ஞாயிறு தோறும் கறிக்கடை போடுபவர் கஞ்சநாயக்கம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பதும் அதற்கு துணையாக அவரது சித்தப்பா பாலுவும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாதிக் பாட்ஷாவின் டாடா ஏசி வாகனத்தில் சென்றுள்ளனர்.மேலும், சாதிக் பாஷாவின் 14 வயது மகன் ஷாருக்கான் விடுமுறையில் அப்பாவிற்கு உதவியாக சென்றதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.