2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் (மார்ச்.19) முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை நேற்று ( மார்ச்.20) காலை தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக, திமுக, மநீம, அமமுக, தேமுதிக, சுயேச்சைகள் உள்பட 412 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் சுமார் 48 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக மேட்டூர் தொகுதியில் 73 பேர் வேட்புமனுக்களும், ஆத்தூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 21 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், கெங்கவல்லி 12, ஆத்தூர் 13, ஏற்காடு 13, ஓமலூர் 18, மேட்டூர் 16, எடப்பாடி 28, சங்ககிரி 24, சேலம் மேற்கு 28, சேலம் வடக்கு 20, சேலம் தெற்கு 30, வீரபாண்டி 22 என மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 224 மனுக்கள் ஏற்கப்பட்டன. சுமார் 188 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மேட்டூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களில் 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 16 மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. எடப்பாடி முதலமைச்சர் பழனிசாமி, சேலம் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜி.வெங்காடச்சலம், சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ வழக்கறிஞர் ஆர். ராஜேந்திரன், ஓமலூர் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். மோகன் குமாரமங்கலம், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் இரா. அருள் உள்பட முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாளை (மார்ச்.22) மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். அதன்பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’திமுகவினரின் அட்டூழியம் இன்னும் 15 நாள்களுக்குதான்’ - அண்ணாமலை