தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடங்கின.
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மே 27ஆம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும் என அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 200 மையங்களில் இந்த பணிகள் நடைபெறுகின்றன.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 6 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இது குறித்து பள்ளிக் கல்வி துறையினர் கூறுகையில், "சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 266 முதன்மை தேர்வாளர்கள், 266 கூர்ந்தாய்வு அலுவலர்கள், ஆயிரத்து 544 உதவி தேர்வாளர்கள், 275 இதர பணியாளர்கள் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
சேலம் கல்வி மாவட்டத்தில் இரண்டு, எடப்பாடி கல்வி மாவட்டத்தில் இரண்டு, ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் இரண்டு என மொத்தம் ஆறு மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.
மேலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில் ”விடைத்தாள் திருத்தும் முன்பும் பின்பும் ஒவ்வொரு முறையும், அறைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி மருந்து மூலம் அவ்வப்போது கைகளைக் கழுவ வேண்டும்.
மேலும், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தகுந்த இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு அறையில் ஒரு முதன்மை தேர்வாளர் ஒரு கூர்ந்தாய்வாளர் , ஆறு உதவி தேர்வாளர்கள் என மொத்தம் எட்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்" என்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காணொலிக் காட்சி மூலம் மக்களுடன் உரையாடும் டிஐஜி