சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக சூரமங்கலம் டி3 (D3) காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 102 சிசிடிவி கேமிராக்கள் பயன்பாடு தொடங்கி வைக்கும் நிகழ்வு, திருவாக்கவுண்டனூர் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சேலம் காவல் ஆணையாளர் சிசிடிவி கேமிராக்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
சேலம் சூரமங்கலம் காவல் நிலைய பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு பணிகளுக்காகவும் புதியதாக 102 கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன. சேலம் சூரமங்கலம், சோனா தொழில் நுட்பக் கல்லூரி, புது ரோடு, பழைய சூரமங்கலம், ரெட்டிப்பட்டி, ஜாஹிர் அம்மாபாளையம், திருவாக்கவுண்டனூர், ஏவிஆர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களை பயன்பாட்டிற்கு தொடக்கிவைக்கும் விழா திருவாக்கவுண்டனூர் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சிசிடிவி காமிராக்களை பயன்பாட்டிற்கு தொடக்கிவைத்தார்.
இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆணையாளர், இந்த சிசிடிவி காமிரா மூலம் பல குற்றங்கள் தடுக்கப்படுவது மட்டுமல்லாது, விடை தெரியாத பல குற்றங்களுக்கு சாட்சியாகவும் அமைகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக அமைகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயம்: ‘தவறாக எடை போட்டிருக்கலாம்’- சிபிஐ அலுவலர்கள்!