ராணிப்பேட்டை: அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தின் அருகே மார்க்கெட் இயங்கி வருகிறது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு மார்க்கெட்டில் கஞ்சா மற்றும் குடிபோதையில் நுழைந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கடையை மூடும்படி மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேன்சி ஸ்டோர் முகேஷ் என்பவரையும், பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பிரசாந்த் என்பவரையும் கடையை மூடச் சொல்லி கத்தியால் தாக்கியுள்ளார். இதில் லேசான வெட்டுக் காயங்களுடன் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனை தடுக்க வந்த ஒருவர் இளைஞரை மடக்கி பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், இது குறித்த தகவல் கிடைத்த அரக்கோணம் நகர காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து வெட்டுக்காயம் ஏற்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், ரகளையில் ஈடுபட்டவர் அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பரணி (25) என்பதும், கஞ்சா போதையில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று (அக்.28) பரணியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அரக்கோணம் நகர காவல் நிலையத்தின் அருகே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கஞ்சா போதையில் இளைஞர்கள் இருவர், அரக்கோணம் நகரத்தின் முக்கிய பகுதியான மார்க்கெட் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து கட்டையைக் கொண்டு தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார், ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இளைஞர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்.. ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானது - டிஜிபி சங்கர் ஜிவால்..