ராணிப்பேட்டை: வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டில் நேற்று (நவம்பர் 18) காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. அதன்படி ராணிப்பேட்டையில் (ranipet) பெய்த கனமழையால் பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத வெள்ளம்
வரலாறுகாணாத வகையில், பல ஆண்டுகளுக்குப் பின்பு வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்குப் பொன்னை, பாலாற்றிலிருந்து வந்த 85 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு (flood) ஏற்பட்டுள்ளது.
வெள்ள இடர் எச்சரிக்கை
இதன் காரணமாக கரையோரம் உள்ள சாத்தம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, சுமைதாங்கி உள்ளிட்ட 17-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்ஃபி எடுக்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றினைக் கடக்க முயற்சி செய்யவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் நேரடியாகச் சென்று பொதுமக்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.
மூழ்கியது தரைப்பாலம்
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு புறங்களிலும் காவல் துறையினர் பேரிக்கேட் (Barricade) அமைத்துள்ளனர். அதனால் வாகன ஓட்டிகள் பாலத்தில் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வைகை கரையோர மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை!