ராணிப்பேட்டை: வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை, தரை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே உள்ள சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்தவர், முத்துகிருஷ்ணன். இவருக்கும், வன்னிவேடு பகுதியைச் சேர்ந்த மணிமேகலைக்கும் கடந்த மூன்று ஆண்களுக்கு முன் திருமணமாகிய நிலையில், இவர்களுக்கு இரண்டு வயதில் மணிமாறன் எனும் மகன் இருந்தார்.
இந்நிலையில், மணிமேகலைக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், முதல் குழந்தை மணிமாறனுடன் அவர் தனது தாய் வீடான வன்னிவேடு பகுதியில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மணிமாறன் எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடி இருந்துள்ளார்.
வீட்டிற்குள் இருந்த தாய் மணிமேகலைக்கு சரியாக காது கேளாமை பிரச்னை இருப்பதாக கூறப்படும் நிலையில், குழந்தையின் சத்தம் கேட்காமல் இருந்துள்ளது. இதையடுத்து நீண்ட நேரமாக குழந்தை காணாததால் தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை இருப்பதைக் கண்ட தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக குழந்தையை மீட்ட தாய் மற்றும் உறவினர்கள் அருகில் இருந்த வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் தந்தை மரணம்: கணவருக்கெதிராக களமிறங்கிய பெண்