ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலையம் சார்பில் சார்பு ஆய்வாளர் சரவணமூர்த்தி தலைமையில் காவல்துறை ஆற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த திருநங்கை மற்றும் வாலிபர் ஒருவரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், அவர்கள் கோணிப்பை ஒன்றில் 2 அடி கற்சிலையை எடுத்துக்கொண்டு சென்றது தெரிய வந்தது. உடனடியாக இருவரையும் காவல்துறை கலவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கலவை அடுத்த மேட்டுநாகலேரி பஜனை கோயில் தொருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் 19 வயதுடைய மகன் ஆனந்தா என்கிற ஆனந்தி (திருநங்கை) என்பதும், மற்றொரு வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் விஷ்ணு என்பதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதம் முன்பு கலவை அடுத்த சென்னலேரி கிராம தேவதையான மந்தவெளி அம்மன் கற்சிலையைத் திருடியதும் தெரியவந்தது. மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் கலவை காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரிய வந்ததால், மறைத்து வைத்திருந்த சிலையை வேறு இடத்திற்கு மாற்றி வைப்பதற்காக எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக சார்பு ஆய்வாளர் சரவணமூர்த்தி, வழக்குப் பதிவு செய்து ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையை வெளுத்தெடுக்கும் மழை. .வெள்ளக்காடாக மாறிய சாலைகள்!