ராணிப்பேட்டை: சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் சிக்கன் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் உள்ள இவரது உறவினர் இறந்து விட்டதால், அந்த துக்க நிகழ்வில் பங்கேற்க உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார். பின்னர், குடும்பத்துடன் மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர்.
அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே பெல் சாலையில் வந்த போது ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தால் இருந்துள்ளார். ஆகையால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமையா பாத்திமா (17), தபாசம் பாத்திமா (15) என்ற இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரில் பயணித்த மூவரும் லேசான காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய போது, கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தீக்கிரையான 30 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி.. திருத்தணி அருகே நிகழ்ந்த கோர விபத்து!