ராணிப்பேட்டை: நுங்கு பிரச்னை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள குப்பிடிசாத்தம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜி மகன் ஆறுமுகம் (21). இவர் பறை இசைக் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று (ஆகஸ்ட் 24) செங்கனாவரம் பகுதியில் நடைபெற்ற கூழ்வாக்கம் திருவிழாவிற்கு தன்னுடன் பணியாற்றும் நண்பர் அழைத்ததால் மேளம் அடிப்பதற்கு ஆறுமுகம், தினேஷ் ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.
அதன் பின் இருவரும் இரவு நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, பென்னகர் மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகன் அஜித் (24) மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுமுகம் மற்றும் தினேஷை தாக்கியுள்ளனர்.
இதில் ஆறுமுகம் மற்றும் தினேஷுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. திருவிழா நேரத்தில் இச்சம்பவம் நடைபெற்றதால் அங்கிருந்த பொதுமக்கள் கத்தியால் தாக்கிய அஜித் மற்றும் வெங்கடேசன் ஆகிய இரு நபர்களையும் தடுத்து தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த இருவரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொல்பொருள் மோசடி வழக்கில் ஐஜி குகுலோத் லக்ஷ்மன் கைது - கேரள குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!
பின்னர் காயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனை அடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கலவை காவல் நிலைய ஆய்வாளர் சரவணமூர்த்தி தலைமையிலான போலீசார் மறைந்திருந்த அஜித்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வெங்கடேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட அஜித்குமாரை போலீசார் விசாரணை செய்ததில், ஆறுமுகத்தினுடைய மாமா நிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நுங்கு வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது இரு தரப்பினர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், முன்விரோத காரணத்தால் ஆறுமுகத்தை கத்தியால் தாக்கியதாகவும் போலிசாரிடம் தெரிவித்துள்ளார். இயற்கையாக கிடைக்கும் நுங்கு, பனங்காய் பிரச்சனையால் கத்தி வெட்டும் அளவுக்கு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையை சேர்ந்த மூவர் கைது.. பெங்களூரில் 20 நாட்கள் தஞ்சம் புகுந்தது ஏன்?