ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அண்ணா சிலை நபிஷா நகர் பகுதியில், இன்று (டிச.31) பள்ளிவாசல் புனரமைக்கும் பணிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "சென்னை எண்ணூர் பகுதியில் கடலில் அமோனியா கசிவு கலந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். இயற்கை சீர்கேடு ஏற்படுத்தும் இந்த விவகாரத்தில், வாயுக் கசிவிற்கு காரணமாக உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை மூடி சீல் வைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் இது போன்ற தொழிற்சாலைகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் யாத்திரை பயணம், தமிழ்நாடு மக்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது அவசியமற்ற ஒரு யாத்திரை. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட யாத்திரைகளில் எந்த வித மக்களின் ஆதரவு இல்லாமல், அதாவது பாஜகவின் தொண்டர்களே குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் யாத்திரைதான் என் மண் என் மக்கள் யாத்திரை.
தமிழ்நாடு என்பது ஒரு மதச்சார்பற்ற மாநிலம். பாஜக போன்ற மதவாதத்தை பேசுகின்ற கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. தற்போது மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை அண்ணாமலை கூட்டத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
அண்ணாமலை போன்ற தலைவரைக் கொண்டு வந்ததற்கு, தமிழ்நாட்டில் பாஜகவின் அழிவிற்கு அவரே காரணமாய் இருக்கிறார். அதனால் அவர்களின் கருத்து மற்றும் சித்தாந்தம் தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில், பாஜக யாத்திரை என்பது பயனற்றது. மக்கள் மட்டுமின்றி, பாஜக நிர்வாகிகளே இந்த யாத்திரையில் அதிருப்தியாக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநில எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலா? ஐஜி பவானீஸ்வரி முக்கிய தகவல்..