ராணிப்பேட்டை மாவட்டம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் தன்னுடன் டிக்டாக் செய்யவருமாறு அழைத்துள்ளார்.
இதற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்குமிடையே மோதல் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையை விக்னேஷ் தனது சகோதரர் விஜயிடம் தெரிவிக்க கோபமடைந்த அவர், ராபர்ட்டை செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
செல்போன் உரையாடல் சற்று கடினமாகவே கோபமடைந்த விஜய், தனது நண்பர்கள் ஆறு பேருடன் சென்று ராபார்ட்டை தாக்கியுள்ளார். அப்போது ராபர்ட் உடனிருந்த அவரது நண்பர் போஸ் அதனை தடுக்க முயற்சித்துள்ளார்.
இதில், கோபம் அடைந்த ஏழு பேர் கொண்ட கும்பல், போஸை கீழே தள்ளியதோடு அவரை கண்மூடித்தனமாக கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால், வெகுநேரமாக உடலில் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்த போஸை, அந்தக் கும்பலே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு போஸின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, விஜய், அவரது நண்பர்களில் சிலர் தப்பிவிட ராஜசேகர், வருண் ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும் விஜய் உள்பட ஏழு பேர் மீது 143, 294(B), 332, 302 ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.
இதையும் பார்க்க: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அஜித் தோவல் ஆலோசனை