ராணிப்பேட்டை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு இடங்களில் கனமழையாக பெய்து, தாழ்வான பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளில், விளைநிலங்களில் மழைநீர் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவு பாதிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து மழை அதிகம் பாதிப்படையும் பகுதிகளில் மீட்பு படைகளை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், புயல் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மழை காலத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி செய்தியாளர்களைச் சந்திப்பில் கூறினார்.
அப்போது பேசிய அவர், "ராணிப்பேட்டை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் அந்தந்த துறைகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மிக்ஜாம் புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற காரணத்திற்காக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: புயல் எதிரொலி: சென்னையில் 7 விமானங்கள் சேவை ரத்து... எந்தெந்த விமானம் தெரியுமா?
தொடர்ந்து பேசிய அவர், "மழை காலங்களில் மின்கம்பங்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மின்கம்பங்களில் கட்டி வைப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இடி மின்னல் ஏற்படும் நேரங்களில் வெளியில் செல்வதையும், மரங்களுக்கு கீழே நிற்பதையும் தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் குடிநீரை சுடவைத்து வெந்நீராக பயண்படுத்த வேண்டும்" என அறிவுரை கூறினார்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 47 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க, அனைத்து பகுதிகளும் மீட்பு பணிகள் மற்றும் முகாம்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, மாவட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை எண் (04172- 271766) தொடர்பு கொள்ளலாம் என்றும், 8300929401 என்ற வாட்ஸ்அப் (WhatApp) மூலமாகவும் தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கக்கடலில் புயல் சின்னம்: 118 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!