ராணிப்பேட்டை: வன்னிய சமூகத்தினர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டி சென்னையில் இன்று (டிச.1) பாமக சார்பில் போராட்டம் நடைபெற இருந்தது.
இதில், பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளாக பாமகவினர் சென்னையை நோக்கி சென்ற வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் காலை முதலே தேவையற்ற பதற்றத்தைத் தடுக்க வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் சென்னை நோக்கி செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யப்பட்டது. மேலும், போராட்டத்திற்கு செல்ல கட்சியினருக்கு முறையான அனுமதி இல்லாததால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டும் வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட பாமகவினர் சுங்கச் சாவடியின் இருபுறங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சாலை மறியலில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு முதல் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் தேங்கி நின்றது.
இதன்காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் வேலூர் சரக டிஐஜி காமினி ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு இப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாமக ஆர்ப்பாட்டம்: கிண்டி - தாம்பரம் பேருந்துகள் நிறுத்தம்