ராணிப்பேட்டை: கள்ளச் சந்தையில் மது விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் தங்களது கிராமப் பகுதியில் அரசு மதுபான கடையைக் கொண்டு வர வேண்டுமென இரண்டு ஊராட்சி சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மதுபான பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவினை வழங்கியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளம் முள்ளுவாடி, மேட்டு முள்ளுவாடி, அரும்பாக்கம், குறுந்தாங்கள் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மது பிரியர்கள் முள்ளுவாடி ஊராட்சி பகுதியில் அரசு மதுபான கடையை அமைக்க வேண்டும் என தெரிவித்து கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
மேலும் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு அறிவிப்பின் காரணமாக முள்ளுவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ஓரமிருந்த அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்து கலவை அடுத்த நேத்தம்பாக்கம் பகுதியில் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முள்ளுவாடி கிராமப் பகுதியில் இருந்து நேத்தம்பாக்கம் வரை ஆறு கிலோ மீட்டர் தொலைவு சென்று தங்களால் மதுபானங்களை வாங்க இயலவில்லை. மேலும் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி நேத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் அரசு மதுபான பாட்டில்களை வாங்கி ஒரு பாட்டிலுக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கூடுதல் விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாமல் செயல்பட்டு வருகின்றனர். மேலும் விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்யும் மது பிரியர்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுபான பாட்டில்களை வாங்கி வருவதால் தங்களது ஒரு நாள் வருமானம் அதிலேயே செலவிடப்படுகின்றது.
ஆகவே கள்ளச் சந்தையில் மது விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்காத மாவட்ட நிர்வாகம் எங்களது கிராமப் பகுதியில் அரசு மதுபான கடையை அமைக்க வேண்டும்" என மதுபான பிரியர்கள் மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சேலம் செயில் நிறுவனம் இடத்தில் உள்ள ராமர் பாதம்? தடையை மீறி பக்தர்கள் தரிசனம்.. வருவாய்த்துறை திடீர் ஆய்வு!