ராணிப்பேட்டை: பானவரம் அடுத்த போலிப்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவந்தது. அதிக அளவில் வேளாண்மை நடைபெறும் நிலையில், கடந்த மூன்று மாதங்களாக அலுவலர்கள், உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது.
நெல் கொள்முதல் நடைபெறாததால், உழவர்கள் கொண்டுவந்த 80 லட்சம் மதிப்பிலான எட்டாயிரம் நெல் மூட்டைகள், கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையில் நனைந்து, முளைத்து வீணாகிவருகின்றன என உழவர்கள் வேதனை தெரிவித்தனர்.
போராட்டம்
மேலும் பானவரம் பகுதியில் உள்ள வருவாய்த் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு முளைத்த நெல் பயிர்களைத் தரையில் கொட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் மூட்டைகள் வீணாகும்பட்சத்தில், அடுத்த போகத்திற்குத் தங்களால் வேளாண்மையில் ஈடுபட முடியாத அளவிற்கு வறுமையில் தவித்துவருவதாகவும், ஆகவே அலுவலர்கள், இதில் தலையிட்டு உடனடியாக நெல்லை கொள்முதல் செய்வதற்கு வழிவகை செய்து தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையடுத்து முன்னதாக கொள்முதல் செய்த நெல்லுக்கு இன்னும் பணம் தரவில்லை எனவும், அதற்கான உரிய பணத்தை வழங்கி தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோடநாடு கொலையை விசாரிக்க தடைகோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!