ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரத்தில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராஜாளி விமான தளம் அமைந்துள்ளது. இங்கு திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வி (45) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (40), அங்குள்ள புல் மற்றும் புதர்களை சுத்தம் செய்வதற்காக நேற்று (அக்.12) சென்றுள்ளனர்.
வேலையின் போது, திடீரென சங்கர் மற்றும் செல்வியின் முதுகு பகுதியில் இரும்பு ராடால் அடித்தது போன்று துப்பாக்கியில் இருந்து ரவைகள் சிதறி வந்து தெறித்துள்ளது. இதில் செல்வி மற்றும் சங்கருக்கு முதுகு பகுதியில் ஐந்து இடங்களில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக, அங்கிருந்த கடற்படை ஊழியர்கள் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் செல்வி மற்றும் சங்கருக்கு உடலில் வலி இருப்பதாக கூறி மீண்டும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கர் மற்றும் செல்விக்கு எப்படி துப்பாக்கி ரவை காயம் ஏற்பட்டது என்பது குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா மற்றும் ஜெர்மன் நாட்டுக்கிடையேயான சட்டபூர்வமான பரஸ்பர ஒப்பந்தத்தில் சிக்கல்