ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தயாளன், கூலித் தொழிலாளி ஆவர். இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்களுக்கு மகன் கீர்த்தி (5), மகள் ஹரிதா (3) என இரண்டு குழந்தைகள் உள்ளன.
தயாளனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மது போதையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 30) தயாளன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தயாளனும் அவரது தாயாரும் வீட்டுக்கு வெளியே உறங்கியுள்ளனர்.
வெண்ணிலா தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் உறங்கியுள்ளார். கணவன் தகராறு செய்ததால் மனமுடைந்த வெண்ணிலா, மகன் கீர்த்தியின் கையை வீட்டிற்குள் இருந்த ஒரு நாற்காலியில் கட்டிவைத்துவிட்டார்.
பின்னர் மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில், சேலையைக் கட்டி சிறுமி ஹரிதாவை தூக்கில் தொங்கவிட்டார். இதில் குழந்தை இறந்தது. பின்னர், வெண்ணிலாவும் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
காலையில் வெண்ணிலா, குழந்தை தூக்கில் தொங்குவதைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவலூர் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்விற்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் தொல்லையால் இரும்பு வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை