ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் 1,014 மற்றும் 1,054ஆம் ஆண்டு ராஜேந்திர சோழர் காலத்தில் ஸ்ரீ மங்கள லட்சுமி சமேத அழகுராஜ பெருமாள் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் நாளடைவில் சிதலமடைந்ததால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கினர். அதன் விளைவாக 53 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்தனர்.
இந்து அறநிலையத்துறை சார்பில், கடந்த ஆண்டு 53 வீடுகளையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இக்கோயிலை புனரமைக்கும் பணிக்காக, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் ரவீந்திரநாத் - பவிதா குடும்பத்தினர் பங்களிப்புடன் 7 கோடி ரூபாய் அளவில் பணிகள் தொடங்கப்பட்டன.
இதனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரூ.3,943 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ஏக்கர் மதிப்பிலான நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் 1,000 ஏக்கர் பரப்பிலான கோயில் நிலங்களில், தற்போது வேலி அமைக்கும் பணிகள் தொடங்கி இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நடந்த கோயில் திருவிழா விபத்தை தொடர்ந்து, வருங்காலத்தில் கோயில் திருவிழாக்களில் கிரேன் மூலமாகவும் மற்றும் வினோதமான வழிபாடுகள் செய்யும்போது, அதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
விரைவில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்கள் முன்பு தன்னை முன்னிறுத்திக் கொள்ளவே சர்ச்சைக்குரிய விஷயங்களை கையில் எடுத்து வருகிறார். ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அலுவலர்போல் சொல்லும், செயலும் இருக்க வேண்டும்” என்றார்.
நேற்றைய முன் தினம் (ஜன.21) தமிழ்நாடு பாஜகவின் ஆலய மற்றும் ஆன்மீக மேம்பாட்டு பிரிவு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழ்நாட்டுக்கு தேவை இல்லாத ஒரு துறையாக இந்து சமய அறநிலையத் துறை உள்ளது’ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரக்கோணம் கிரேன் விபத்து நிகழ்ந்தது எப்படி? முழு விவரம்