ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அக்ராவரம் பகுதியில் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் தலைமையில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டார். அப்போது, "மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டத்தைத் தொடர்ந்து, இரவிலும் மாணவர்களுக்கு உணவு வழங்க முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நேரம் வரும் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்" என்று பேசினார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உயர் நீதிமன்றத்தில் முரசொலி நாளிதழ் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விசாரணையை எஸ்.சி எஸ்.டி ஆணையம் புதியதாகத் தொடர வேண்டுமென நீதிமன்றம் அறிவித்திருப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "நான் அந்த தகவலைக் கேட்கவில்லை. அது குறித்து எனக்குத் தெரியாது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்களின் இரண்டாம் நாள் போராட்டம் குறித்த கேள்விக்கு, "ஒரு சில பேர் மட்டும் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பேருந்துகள் வழக்கம் போல இயக்கத்திலிருந்து கொண்டுதான் இருக்கின்றது" எனத் தெரிவித்தார். பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கான பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறித்துக் கேட்கப்பட்டதற்கு, "வருகின்ற பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் தனியார் காலணி தொழிற்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த உள்ளிருப்பு போராட்டம்!