ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமி தெருவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சமையல் மாஸ்டர் திருமால் (57) என்பவரின் வீட்டின் அருகே இருந்த ஆழ்துளைக் கிணற்றின் இரும்புக் குழாயை, சீதாராமய்யர் தெருவைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் பெட்ரோல் செல்வம் என்றழைக்கப்படும் செல்வகுமார் (27) என்பவர் திருடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, சத்தம் கேட்ட திருமால் வெளியே வந்துள்ளார். குழாயை உடைத்துக் கொண்டு இருந்த திருமாலைக் கண்டதும், அந்த இடத்திலிருந்து செல்வகுமார் தப்பி ஓடியுள்ளார். அதன் பின்னர் திருமால், செல்வத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது செல்வம் தன் கையில் வைத்திருந்த இரும்பு ராடால், திருமலையை பயங்கரமாக தாக்கியுள்ளார்.
அதில் தலையில் பலத்த காயம் அடைந்த சமையல் மாஸ்டர் திருமால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து அக்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கொலை செய்த பெட்ரோல் செல்வம் என்றழைக்கப்படும் செல்வகுமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டர். மேலும், அவர் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணை, ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (டிச.15) கூடுதல் அமர்வு நீதிமன்ற நடுவர் ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சமையல் மாஸ்டரை கொலை செய்த குற்றத்திற்காக, செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஈரான் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் மரணம்..