ராணிப்பேட்டை: திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணி (58) இவர் ஒப்பந்த தூய்மை பணியாளராக அப்பகுதியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மணியின் மனைவி உமா (49) கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இருப்பினும் போதிய வசதி மற்றும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மருத்துவ சிகிச்சைகள் பெறாமல் அலட்சியமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உமாவிற்கு அதிகப்படியான வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ராஜேஸ்வரி மருத்துவமனையில் உமா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் உமாவை பரிசோதனை செய்து ஸ்கேன் எடுத்து பார்த்தபோது உமாவின் கருப்பையில் லியோமியோமா (leiomyoma) எனப்படுகின்ற கட்டியிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உமாவிற்கு இன்று மருத்துவர் கபில் நாகராஜ் மற்றும் முகமத் சாகித் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் இணைந்து 3 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இந்த அறுவை சிகிச்சையின் போது உமாவின் கருப்பையில் இருந்த 8 கிலோ எடை கொண்ட லியோமியோமா (leiomyoma) கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக எவ்வித பாதிப்பும் இன்றி அப்புறப்படுத்தினர். மேலும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கபீல் நாகராஜ் தெரிவிக்கையில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு உமா வயிற்றுவலி காரணமாக வந்ததாகவும், அப்பொழுது உமாவை ஸ்கேன் செய்து பார்த்த போது உமாவின் வயிற்றில் கருப்பையில் அதி வேகமாக வளரக்கூடிய லியோமியோமா (leiomyoma) எனப்படுகின்ற கட்டி இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து உடனடியாக உமாவிற்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வயிற்றில் இருந்த கட்டியை எவ்வித பாதிப்பு இன்றி வெற்றிகரமாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும், மேலும் அப்புறப்படுத்தப்பட்ட கட்டியின் எடை அளவு 8 கிலோ இருப்பதாகவும், அதனை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் ஆய்வின் அறிக்கையின் படி தொடர் சிகிச்சை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இதுபோல வேகமாக வளரக்கூடிய கட்டிகளை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் இது போன்ற கட்டிகளால் புற்றுநோய் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் ஏற்படக் கூடுமென தெரிவித்தார். எனவே போதிய விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் உமா தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.