ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வானாபாடி கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத சொற்பொழிவு பெருவிழாவானது கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு, நாடகம் ஆகியவை நடந்து வந்தன. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 'துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி' இன்று (ஏப்.23) திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனனின் பிரம்மாண்ட உருவம் மண் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இதனைத்தொடர்ந்து, மைதானத்தில் துரியோதனும், பீமனும் இருவரும் ஆயுதங்களை ஏந்தி சண்டையிட்டபடி பீமன் துரியோதனனை துரத்தி வந்து தொடை பகுதியில் ஓங்கி அடித்து துரியோதனனை படுகளத்தில் வதம் செய்த காட்சி நடத்திக் காட்டப்பட்டது. இதன் பிறகு, பீமன் மற்றும் துரியோதனனை அங்கு இருந்த பக்தர்கள் அனைவரும் தோளில் தூக்கிச் சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக, துரியோதனனின் அம்மாவான காந்தாரி படுகளத்தில் உயிரிழந்த தனது மகனைப் பார்த்து கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில், 'மகனே!.. இறந்துபோய் விட்டாயா..' என சத்தமிடு அழுது ஒப்பாரி வைத்து தனது மனக்கவலையை தீர்த்துக் கொண்டார். இந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் வானாபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: Basava Jayanthi: பசவண்ணாவின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை!