ராணிப்பேட்டை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழையால் ஏரிகள், குட்டைகள் மற்றும் அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.
வேதனையில் விவசாயிகள்: இந்நிலையில், ராணிப்பேட்டையின் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்ள விவசாயிகள், சீரக சம்பா, கோ 51, மகேந்திரா, குண்டு 37 உள்ளிட்ட பல வகையான நெற்பயிர்களை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இந்த நெற்பயிர்கள் விளைந்து தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் தங்கள் நிலத்தில் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பயிர்கள் சேதம் : குறிப்பாகக் கலவை அடுத்த குப்பிடிச்சாத்தம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் தொடர்ந்து பெய்த மழையால் நீரில் மூழ்கி சேதமானது. இதனையடுத்து, வேளாண்மை உதவி அலுவலர் ராதிகா, கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி, ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதே போல் மேல்புதுப்பாக்கம், பிண்டித்தாங்கல், கலவை, பரிக்கல்பட்டு, நல்லூர், சென்னசமுத்திரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “ஒரு ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்வதற்கு ஏர் உழுது, அறுவடை செய்யும் வரை பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் தொடர்ந்து, மழை பெய்து வருவதால் தங்கள் நிலத்தில் விளைந்த நெற்பயிர்களை நீரில் மூழ்கிச் சாய்ந்தும் கிடப்பதால் அறுவடை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதன் காரணமாகச் செலவு செய்த பணத்தைக் கூட எடுக்க முடியாது சூழ்நிலை உள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையால் சேதம் அடைந்துள்ள பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடித்தவரின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை!