ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அடுத்த முசிறி பகுதியில் சன்பிக்ஸ் என்ற தனியார் கெமிக்கல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு ரசாயணங்கள் மற்றும் ஆசிட்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஆசிட் தேக்கி வைக்க 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகள் உள்ளன.
இந்த நிலையில் இன்று (நவ. 24) காலை அலுமினியம் குளோரைடு ஆசிட் தேக்கி வைக்கப்பட்டிருந்த ராட்சத டேங்க் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் ஆசிட் தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக உருவாகும் நச்சு புகையால் அப்பகுதி முழுவதும் புகைமுட்டமாக காணப்பட்டது.
டேங்கானது உடைந்து ஆசிட் தாக்கம் குறைவு என்பதால் அதிர்ஷ்டவசமாக தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள் சிறு பாதிப்புகளுடன் உயிர் தப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்படத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 10 பேர் அடங்கிய குழுவாக தண்ணீரை அடித்தும், எம்-சாண்ட்டை கொட்டியும் அமிலத்தின் வீரியம் மற்றும் ஏற்படும் புகையை கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.
தொடர்ந்து விபத்துக்குள்ளான தொழிற்சாலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை நிறைவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பிப்பு!