ராணிப்பேட்டை: சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட புலிவலம் கிராம ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டு, வரும் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கிறிஸ்தவராக மதம் மாறிய ஒருவர், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பதவிக்கு, இந்து ஆதி திராவிடர் எனப் போலியாகச் சான்றிதழ் பெற்று போட்டியிடுவதாகக் கூறி, அமெரிக்காவில் வசித்துவரும் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார் சத்தியசீலன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், "சோளிங்கரில் இனிப்பு கடை நடத்தும் சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத், புலிவலத்தில் உள்ள என் வீட்டு (சத்தியசீலனின்) முகவரியைப் பயன்படுத்தி வேட்புமனு தாக்கல்செய்துள்ளார்.
அவர் கிறிஸ்தவராக மதம் மாறி தற்போது தென்னிந்திய திருச்சபையில் உறுப்பினராக உள்ள நிலையில், இந்து ஆதிதிராவிடர் எனச் சட்டத்திற்குப் புறம்பாகச் சாதி சான்றிதழ் பெற்று போட்டியிடுவதால், அவரது வேட்புமனுவை நிராகரித்து உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![பஞ்சாயத்து தலைவர் பதவி போட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13280277_che.jpg)
நீதிபதிகள் உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், சத்திகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வரும் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் நடைமுறை தொடங்கியபின் அதில் தலையிட முடியாது, தேர்தல் முடிந்த பின் மனுதாரர் உரிய அமைப்பை அணுகலாம் எனக் கூறி, நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: காவல் துறையின் அதிரடி நடவடிக்கை - கொத்தாக கைதான ரவுடிகள்