ராணிப்பேட்டை: மும்பையில் இருந்து சென்னை வந்த லோக்மான்ய திலக் விரைவு ரயிலில், சந்தேகப்படும் வகையில் ஒருவர் பயணிப்பதாக, NIBCID டிஎஸ்பிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து NIBCID டிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து திருத்தணி இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்த லோக்மான்ய திலக் விரைவு ரயிலில், தீவிர சோதனை செய்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற நபரை மடக்கிப் பிடித்து, விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், கட்டுக்கட்டாக 6 லட்சம் ரூபாய், 116 கிராம் தங்கமும் இருந்தது தெரிய வந்தது.
அதன் பின் போலீசார் அந்த நபரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம், சுன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜீலன் மொய்தீன் (வயது 44) என்பது தெரிய வந்தது. மேலும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பணத்தையும், தங்கத்தையும் ஹவாலா பணமாகக் கொடுக்க சென்றதும் அம்பலமானது. பிடிபட்ட ஜீலன் மொய்தீனையும் ஹவாலா பணத்தையும், தங்கத்தையும் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரி பாலச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: ஆய்வுக்குச் சென்ற இடத்தில் சோதனை.. அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு!