ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்துள்ள மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் (வயது 51). இவர் சொந்தமாக லோடு வேனை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஆசிப் (வயது 26).
ஆசிப், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களோடு இணைந்து இரவு நேரத்தில் லோடு வேனில் விளையாட்டாக த்ரில் ரைடு செல்ல முடிவுசெய்து, ஹாஜிப்பேட்டையில் இருந்து கிளம்பினார்கள். அதிவேகமாக சென்ற லோடு வேன் இரவு ஒரு மணி அளவில் ஹாஜிப்பேட்டையை அடுத்துள்ள வளைவில் நிலை தடுமாறி, சுவரில் மோதி கவிழ்ந்த விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆற்காடு நகர காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. இந்த கோர விபத்தில் துபையல்(வயது 24), சையது(வயது 22), அலீம் (வயது 26), கலிமுல்லா(வயது 25) ஆகிய நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். நியால் (வயது 24) என்ற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற நான்கு பேர் படுகாயங்களுடன் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடிபோதையில் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டாக செய்த பயணம் விபத்தில் போய் நின்று விபரீதமாக முடிந்து 4 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பழிக்குப்பழியாக நெல்லையில் நடந்த இரட்டைக்கொலை...