ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள பூண்டி மகான் குளத்தின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன், எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதகுமார், பிரசாந்தினி என்ற தம்பதிக்கு ஷாஷினி என்ற மகளும், லக்சன் (7) என்ற மகனும் உள்ளனர். பெற்றோர் இருவரும் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்காக பிள்ளைகள் இருவரும், வாலாஜாபேட்டையில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்து உள்ளனர்.
இந்த நிலையில், இன்று (டிச.28) பாட்டி வீட்டின் அருகே உள்ள பூண்டி மகான் குளத்திற்கு அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வாலாஜாபேட்டை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு உதவிய ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர்!