ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி (ஜூன்.15) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த 20 நாள்களில் கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சைக்காக 56 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஊரடங்கும் முடிந்து அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன" என்றார்.
தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பதாகப் புகார் எழுந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கி வரும் கரோனா நிவாரண நிதியான இரண்டாயிரம் ரூபாய், 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு, வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச பட்டா உள்ளிட்ட 96 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.