ராமநாதபுரம்: தொருவளூர் சிறுவயல் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (22). இவரது தூரத்து உறவினர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா(24). இவர், கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் கே.கே. நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், விஜய்யிடம் குடும்ப தேவைக்காக சௌமியா 13.5 சவரன் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.
இந்த நகைகளை விஜய் திருப்பி கேட்டபோது, “எனக்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களை நன்கு தெரியும். உனது தம்பிகளுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன்” எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய விஜய், தனது தம்பி தனுஷ் என்பவருக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக மோசடி
இதற்காக சௌமியா விஜய்யிடம் 75 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும், விஜய்யின் உறவுக்கார தம்பிகளான விஸ்வா, பாலமுருகன் ஆகியோருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார்.
பணம் வாங்கி பல நாள்கள் ஆன நிலையில், சௌமியாவை சந்தித்த விஜய் விரைவில் வேலை வாங்கித் தரும்படியும் இல்லையெனில் பணம், நகைகளைத் திருப்பித் தரும்படியும் கேட்டுள்ளார். இதற்கு சௌமியா, பணத்தினை அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், வேலை கட்டாயம் வாங்கி தந்துவிடுவார்கள் என்றும் கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.
காவல் துறை விசாரணை
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜய் இது குறித்து ராமநாதபரம் எஸ்.பி கார்த்திக்கிடம் புகார் அளித்தார். அவர் உத்தரவின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், மொத்தமாக 6 பேரிடம், 63 சவரன் தங்க நகை, 9 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு ராமநாதபுரம் அருகேவுள்ள சிறுவயலைச் சேர்ந்த அருமைதுரை மகன் சதீஷ் (25) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
சிறையில் அடைப்பு
இவரின் மூலமே பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை சௌமியா மேற்கொண்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து, இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் சேலம் சின்னதிருப்பதி பகுதியில் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர், இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்களை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சௌமியாவை மதுரை சிறையிலும், சதீசை விருதுநகர் சிறையிலும் அடைத்தனர்.
இதையும் படிங்க: மோசடி செய்த ஆடிட்டரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: 6 பேர் கைது