நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் சென்ற ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்று உத்தரவு வழங்கியது. 100 விழுக்காடு இருக்கைகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படும்போது திரைப்படம் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து 100% இருக்கைகளை திரையரங்குகளில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி இரண்டு நாள்களுக்கு முன்பாக 100 விழுக்காடு இருக்கைகள் பயன்படுத்தலாம் என அறிவித்தார்.
தொடர்ந்து, வரும் 13ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக வழிவிடு முருகன் கோவில் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.