கோவை காமநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் பட்டாசு திரிகளை சிவகாசிக்கு பார்சல் அனுப்ப பிக்கப் வாகனம் மூலம் காந்திபுரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, நஞ்சப்பா சாலையில் வந்து கொண்டிருக்கும்போது வாகனத்தின் முன்புறம் புகை வந்ததைத் தொடர்ந்து உடனடியாக வாகனத்தை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
வாகனத்தின் முன்பக்கம் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அருகில் இருந்த வாகனங்களைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். பின்னர் ஈஸ்வரனுடன் இணைந்து அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால், தீயை அணைக்க முடியாததால் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.