இராமநாதபுரம்: உதயநிதி ஸ்டாலின் பக்குவமற்ற அரசியல்வாதி, தாத்தா, அப்பா அரசியல்வாதி என்ற அடையாள அட்டையுடன் வந்துள்ளார் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார்.
பெண்களை இழிவாக பேசி வரும் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழியை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மாவட்ட கழக செயலாளர் முனியசாமி, பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதியோர் ஓய்வூதியம் ரூபாய் 500 வழங்கினார். பின்னர் 2011இல் இருந்து ரூபாய் 1000 வழங்கினார். கடந்த பத்தாண்டுகளாக முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்ததாக முதியோர் ஓய்வூதியம் ரூபாய் 1500 வழங்கப்பட உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் பொங்கல் பரிசு ரூபாய் 100 வழங்கப்பட்டது. பின்னர் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது 2500 ரூபாய் வழங்கி உள்ளோம். உதயநிதி ஸ்டாலின் பக்குவமற்ற அரசியல்வாதியாக உள்ளார்.
எவ்விதமான அரசியல் அனுபவமும் அவருக்கு இல்லை. தாத்தா கருணாநிதி, அப்பா ஸ்டாலின் என்ற அடையாள அட்டையுடன் வந்துள்ளார். கொஞ்சநாள் பணம் செலவழித்து படத்தில் நடித்தார். அங்கு காதல் மலர்ந்தது, மலர்ந்த காதல் கைகூடவில்லை என தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இந்நிலையில், காதல் மலர்ந்து கைகூடவில்லை, அரசியலில் ஓய்வெடுக்கலாம் என இங்கு வந்துள்ளார்.
எங்கு சென்றாலும் இதுபோன்று வக்கிரமாக நடந்துகொண்டால் எதுவும் கைகூடாது. ஆகவே வாழ்க்கையும் கைகூடாது, அரசியலும் கைகூடாது. ஆகமொத்தம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதுவும் கைகூடாது. எனவே இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றதாக வரலாறு இல்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க: மதுரைன்னாலே வீரம்தான் - உதயநிதி ஸ்டாலின்