ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாரையூரணியைச் சேர்ந்தவர் கபிலன்(23). ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், தனது இருசக்கர வாகனத்தில் உச்சிப்புளியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ராமநாதபுரம் ஆர்டிஓ அலுவலகம் அருகே கபிலனின் வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கேணிக்கரை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல், முதுகுளத்தூர் அருகே புல்வாயக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்த இவர், தனது இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, முதுகுளத்தூர் சாலையில் தலைக்கால் கிராமம் அருகே மழை பெய்து கொண்டிருந்ததால் வேகத்தடையில் இவரின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி, எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.