முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து, கமுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் வந்திருக்குமா, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியிருப்பார்களா. இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மே 2க்குள் வேறு கட்சிக்கு போனாலும் போய்விடுவார். ஏனெனில் அவர் இல்லாத கட்சியே இங்கில்லை.
கச்சத்தீவை தாரை வார்த்தவர் ஸ்டாலினின் அப்பாதான். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான். 10 ஆண்டுகளாக ஆட்சி இல்லாததால் கடும் பசியோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என ருசி கண்டவரும், ருசித்துக் கொண்டிருப்பவரும் இருக்கிறார்கள். ஆனால், இத்தேர்தல் மூலம் தமிழகம் முன்னுக்கு வரவேண்டும். அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அது இவர்களால் முடியாது” என்றார்.
இதையும் படிங்க: அமைதிப்பூங்காவாக தமிழகம் தொடர அதிமுகவுக்கு வாக்களிப்பீர் - முதலமைச்சர்