தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2019ஆம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரை முதலில் மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பின் சிபிசிஐடி காவல் துறையினரிடம் புகார் அளித்தது.
அதனடிப்படையில், சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தேர்வு முறைகேட்டிற்கு இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் உள்பட பலரைக் கைது செய்துள்ளது.
மேலும், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியதுடன், அடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து, ஜெயக்குமாரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில் ஜெயக்குமார் இராமேஸ்வரம் வந்து தங்கியிருந்த, தனியார் விடுதியை சிபிசிஐடி-யிடம் அடையாளம் காட்டி, 'எவ்வாறு முறைகேடு செய்தோம்' என விளக்கினார்.
சிபிசிஐடி டிஎஸ்பி சிவாணு பாண்டியன் தலைமையில் நடைபெற்ற, இந்த விசாரணையில் சார்பு ஆய்வாளர், பெண் அலுவலர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற மனு..!